புதிய பாடத்திட்டங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-30

2018-2019-ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கான மானிய கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் செங்கோட்டையனும், உயர்கல்வித்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் கே.பி. அன்பழகனும் பதிலளித்தனர்.  அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வுக்கு 90 சதவீத கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில், சட்டப்பேரையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ பரமசிவன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித்துறையில் மேல்நிலை தொட்டிகளை நிர்வாகிக்கும் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். மேலும்,  அரசு விதிகளுக்கு உட்பட்டு விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சட்டப்பேரவையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமன்றத்தில் உடனே சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை தற்காலிக தீர்வே என்று தெரிவித்த டிடிவி தினகரன்,  உச்சநீதிமன்றம் சென்றால் அரசாணையை ஸ்டெர்லைட்  நிர்வாகம் எளிதாக உடைத்துவிடக்கூடும் என்று கூறினார்.

Related Posts