புதிய பாடத்திட்டங்களை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் 1, 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட புத்தகங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

சென்னை : மே-04

நீட் போன்ற போட்டித் தேர்வுகளை தமிழக மாணவ மாணவிகள் அச்சமின்றி எதிர்கொள்ளக் கூடிய வகையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் அடங்கிய குழு சிபிஎஸ்இ தரத்துக்கு நிகராக பாடத்திட்ட வரைவு தயாரித்து 2017 நவம்பர் 20-ஆம் தேதி அறிமுகம் செய்தது. புதிய வரைவுப் பாடத்திட்டத்தின் நகல்களை கல்வியாளர்கள் பெற்றோர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, 2018-19 -வது கல்வி ஆண்டில் ஒன்று, ஆறு, ஒன்பது, பதினொன்று ஆகிய வகுப்புக்களுக்கான பாட நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அத்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், பாடநூல் தயாரிப்புக் குழுவினர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதம் பள்ளி தொடங்கும்போது புதிய புத்தகம் அரசு பள்ளி மாணவர்களிடம் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி பாடம் எடுக்க ஆசிரியர்களுக்கு வரும் ஜுன் 1 முதல் 15-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020-வது கல்வி ஆண்டில் 2,7,10,12.ஆம் வகுப்புக்களுக்கும், 2020-2021-வது கல்வி ஆண்டில் 3,4,5,8-ஆம் வகுப்புக்களுக்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Posts