புதிய பேருந்துகளினுள்,  ஆங்கிலம் மற்றும் இந்தி வாக்கியங்கள் இடம் பெற்று இருப்பதற்கு  கனிமொழி கடும் கண்டனம் 

159 கோடி ரூபாய் மதிப்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி கடந்த 4-ம் தேதி கொடியசைத்து  தொடங்கி வைத்தார். பின்னர் இந்த பேருந்துகள் அனைத்தும் விரைவுப்போக்குவரத்துக்கழகம், மாநகரப்போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய பேருந்துகளினுள் அவசர வழி என்று தமிழில் எழுதுவதற்கு பதில் அந்த வார்த்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம் பெற்று இருப்பது காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே போல தீயணைப்பான் உள்ளிட்ட அவசர குறிப்புகள் பலவும் தமிழில் எழுதப்படுவதற்கு பதில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இது, தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக அரசின் இந்த செயலுக்கு, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது கருத்தை  சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர், தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என்பது கண்டிக்கத்தக்கது என்றும் மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், அவர்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என  அதிமுக அரசு இந்தியை திணிப்பதாகவும் சாடியுள்ளார்.

தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படும் மாநில பேருந்துகளில் கூட இந்தி ஆக்கிரமிப்பு செய்து இருப்பது தமிழர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

Related Posts