புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் வகையில் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்து இருந்தார். உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமான இதன் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த திட்டத்துக்காக மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ மனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 15 ஆயிரம் மருத்துவ மனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் மிக எளிதாக பயன்பெறுவார்கள். ஆயுஷ்மான் பாரத் எனப்படும் இந்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் தீனதயாள் உபாத்யாயா பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இந்த திட்டம் 2 நாள் முன்னதாக நாளை தொடங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட தொடங்கும்.

Related Posts