புதுச்சேரியில் உள்ள 100 அடி சாலை மற்றும் இணைப்பு சாலைக்கு கருணாநிதியின் பெயர்

புதுச்சேரியில் உள்ள 100 அடி சாலை மற்றும் இணைப்பு சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

                புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 100 அடி சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதுதவிர காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளார் இணைப்பு சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையம் ஆகியவற்றுக்கும் கருணாநிதி பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும்,  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார. புதுச்சேரியின் 4பிராந்தியங்களிலும் உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை தூர்வார அரசு முடிவு செய்துள்ளது எனவும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான மணலை அங்கிருந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்காக மாட்டு வண்டிக்கு 50 ரூபாய், டிராக்டருக்கு 100 ரூபாய் லாரிக்கு 150 ரூபாய் என மணல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தொகை கொம்யூன் பஞ்சாயத்து வளர்ச்சிக்காக வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Related Posts