புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க கிரண்பேடி எடுத்த நடவடிக்கை ரத்து.

புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து, சட்டப்பேரவைத் தலைவர்  சிவக்கொழுந்து உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் காலை கூடியவுடன்  சிறப்பு பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள முடிவுகள் குறித்து பேரவை உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையரை நியமனம் செய்வது தொடர்பாக துணை நிலை ஆளுநர் எடுத்த நடவடிக்கை தொடர்பான பிரச்சினை பேரவையில் எழுந்தது. அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக எடுத்த முடிவு அமைச்சரவையின் உரிமையை பறிக்கும் செயல் என்றும் இவ்விஷயத்தில் சட்டப்பேரவை தலைவர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனையடுத்து பேசிய சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து, மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிட்டார். இது தொடர்பான கோப்புகள் அனைத்தையும் தலைமை செயலாளர் இரு தினங்களுக்குள் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது  உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts