புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்குள்  நுழைய முயன்ற காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்குள்  நுழைய முயன்ற காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து, ஆளுநர் மாளிகை முன்பு,முதலமைச்சர் நாராயணசாமி மேற்கொண்டு வரும் தர்ணாப் போராட்டம் இன்று, 2ஆவது நாளாக நீடிக்கிறது.புதுச்சேரியில் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதும், கிரண்பேடியே சாலையில் நின்று வாகனங்களில் வந்தோரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹெல்மெட் விவகாரத்தில் காட்டும் அக்கறையை மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடுவதில் கிரண்பேடி காட்டவில்லை என்று கூறி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்தும், காங்கிரஸ் மற்றும் திமுகசட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு துண்டு அணிந்தும் ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து நேற்று பிற்பகலில் தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், தலைமை செயலாளர் அஸ்வினி குமார் மற்றும்காவல்துறை டி ஜி பி சுந்தரி நந்தா ஆகியோர் நேற்று இரவு முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அங்கேயே உணவு அருந்தியும், தரையில் படுத்து உறங்கியும் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர், மாளிகையை சுற்றிவளைத்து தர்ணா போராட்டம் நடைபெற்றதால் கிரண்பேடி வெளியில் செல்ல முடியாத சூழல் உருவானது. மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிரண்பேடி அளித்த தகவலை அடுத்து, அரக்கோணம் மற்றும் ஆவடியிலிருந்து அதிவிரைவு படையை சேர்ந்த 4 கம்பெனி வீரர்கள் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களின் உதவியோடு, சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கிரண்பேடி புறப்பட்டுச் சென்றார்.  முதலமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட போராட்டம் நடத்துவது என்பது இதுவரை கேட்டிராதது என்றும், சட்டத்திற்கு புறம்பான முறையில் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நாராயணசாமிக்கு, கிரண்பேடி நேற்று இரவு கடிதம் எழுதியிருந்தார். வரும் 21ஆம் தேதி பேச்சு நடத்த ஆளுநர் மாளிகைக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தர்ணா நடைபெறும் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மக்கள் நலன் சார்ந்த 39 திட்டங்களுக்கான கோப்புகளில் துணைநிலை ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டும் போராட்டத்தை கைவிடுவோம் என நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்குள்  நுழைய முயன்ற காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி சமாதானம் செய்தும் அதனை ஏற்க மறுத்து தொண்டர்கள் போராட்ட்த்தில் ஈடுப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொலைப்பேசி மூலம் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை தொடர்புகொண்டு, போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.   இதனிடையே காவல்துறை தலைவர் சுந்தரி நந்தாவை  புதுச்சேரி பாஜக  தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, பேசினர். அப்போது  அனுமதியின்றி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுள்ள முதல்வர், மற்றும் அமைச்சர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு முதல்வர் காரணம் என புகார் தெரிவித்துள்ளனர்.

 

Related Posts