புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை

புதுக்கோட்டையில் கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு இன்று மாலை பார்வையிடுகிறது.    கஜா புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும்படி கோரிக்கை மனு கொடுத்தார். மேலும் புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினார். அதை ஏற்று மத்திய குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்த குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு, நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கால், வேளாண் கூட்டுறவுத் துறை இயக்குனர் பி.கே.ஹவச்தவா, ஊரக வளர்ச்சி துறை துணை இயக்குனர் மானிக் சந்திரபண்டிட், மின்வாரிய முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், நீர்வளத்துறை இயக்குனர் ஹர்ஷா, நெடுஞ்சாலை,போக்குவரத்து கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நேற்று இரவு சென்னை வந்தடைந்த இந்தக் குழுவினர், இன்று காலை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சரை சந்தித்து பேசினர். முன்னதாக வருவாய்த்துறை, நிதித்துறை, வேளாண்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.அப்போது, மத்திய குழுவுக்கு `கஜா’’ புயல் பாதிப்பு குறித்து வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களுடன் விளக்கி கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்தியக் குழுவினர்,  அங்கிருந்து காரில் சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிட உள்ளனர். முதலாவதாக புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் கந்தர்வகோட்டை பகுதியில் அருந்ததியர் காலனி, சோழகம்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, புதுநகர், முதுகுளம், உரியம்பட்டி, நெற்புகை, வீரடிபட்டி உள்ளிட்ட 8 இடங்களை பார்வையிடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மீட்பு குழு அதிகாரி சுனில் பாலிவால், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சம்பு கலோ லிகர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். குழுவினருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர்.

Related Posts