புலவர் கி.த.பச்சையப்பன் மறைவுக்கு வைகோ இரங்கல்…

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மொழிப்போராட்டத் தியாகியும், தமிழ் அறிஞரும், தன்னலம் இன்றிப் பொதுவாழ்வுக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டவரும், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான புலவர் கி.த. பச்சையப்பன் அவர்கள், ஒரு வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றம் வந்திருந்தபோது மாரடைப்பால்  மறைந்தார் என்ற  செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சென்னை வண்ணாரப்பேட்டை கோ.சி.சங்கரலிங்க நாடார் மேனிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்ற பின்னர், வள்ளல் எட்டியப்ப நாயக்கர் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பு வகித்தார். போராட்டக்காரர். மக்கள் பிரச்சினைகளுக்காக, மாணவர்களைக் களம் இறக்கிப் போராடச் செய்தவர். மக்கள் தொலைக்காட்சியில் மொழிநடை ஆசிரியராகப் பணியாற்றி, தூய தமிழில் தொலைக்காட்சி இயங்கக் கடமை ஆற்றினார்.

ஈழத்தமிழ் உணர்வாளர். எத்தனையோ நிகழ்வுகளில் அவரைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்து இருக்கின்றேன். என் மீது மிகுந்த அன்பும், பரிவும் கொண்டவர். நானும் அவருக்கு உரிய மரியாதை அளித்துச் சிறப்பித்து இருக்கின்றேன். எந்நேரமும் புன்னகை தவழும் முகம்; பெயருக்கு ஏற்றார் போல், தோள்களில் பச்சைத்துண்டு காட்சி அளிக்கும்.

தஞ்சை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சாணூ ரப் பட்டியில், தழல் ஈகி முத்துக்குமார் சிலையை, புலவர் இரத்தினவேலன் அவர்கள் தம் சொந்த இடத்தில் நிறுவினார்கள். திறப்புவிழாவில் புலவர் கி.த.ப. அவர்களைக் கண்டபோது வாட்டமாக இருந்தார். உடல் நலம் விசாரித்தேன். மருத்துவமனையில் இருந்ததாகச் சொன்னார். ‘ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டாமா?’ என்று கேட்டேன். ‘இந்த நிகழ்வில் கலந்து கொள்வது என் கடமை’ என்றார்.

புலவர் இரத்தனவேலன் அவர்கள் அமைத்த சிலைதிறப்பு விழாவிற்குப் பின்னர், அங்கேயே பின்னால் கட்டி இருந்த பிரபாகரன் மாளிகை, எம்.ஜி.ஆர். வணிக வளாகம் ஆகியவற்றை, அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும், நானும் திறந்து வைத்தோம். இரத்தினவேலன் அவர்களுடைய புதிய இல்லத்தைத் திறக்க வேண்டிய அண்ணன் நல்லகண்ணு அவர்கள் வர இயலவில்லை. எனவே, என்னைத் திறந்து வைக்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதை நான் மறுத்து, ‘ஐயா புலவர் கி.த.பச்சையப்பன் அவர்கள் திறப்பதே பொருத்தமானது’ என்றேன். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். அவரே இல்லத்தைத் திறந்து வைத்தார்.

அண்மையில் வெளியிடப்பட்ட என்னுடைய பொதுவாழ்வுப் பொன்விழா மலருக்காக, ‘மாந்த நேயர் வைகோ’ என்ற தலைப்பில் என்னைப் பற்றி, இரண்டு பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் பல செய்திகளைப் பதிவு செய்துள்ளார். தமிழ் அறிஞர்களைப் பாதுகாத்துப் போற்ற வேண்டியது நம் கடமை.

புலவர் கி.த.ப., அவர்களின் மறைவு, பேரிழப்பாகும். அவரது உற்றார், உறவினர்களுக்கும், தமிழ் அன்பர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனக் கூறியுள்ளார்.

Related Posts