புழல் சிறையை உல்லாச விடுதியாக மாற்றிய கைதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சொகுசு வசதியுடன் கூடிய படுக்கை அறைகள், செல்போன், விதவிதமான உணவு என  புழல் சிறையை உல்லாச விடுதியாக மாற்றிய கைதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

          புழல் மத்திய சிறையில், தண்டனை கைதிகளுக்கான சிறையில் 750-க்கும் மேற்பட்டோரும், விசாரணை கைதிகளுக்கான சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்டோரும் அடைக்கப்பட்டு உள்ளனர். புழல் சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவதும், அதற்கு உடந்தையாக இருக்கும் சிறை காவலர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.  மேலும், கைதிகள்  பரோல் விடுப்பில் செல்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக கைதிகளின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

          இதேபோல் கஞ்சா, செல்போன்களை சிறையில் உள்ள கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பல்லாயிரக்கணக்கில் பணம் லஞ்சம் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து, சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி விளக்கம் கேட்டு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள சிறைகளில் சோதனை நடத்தப்பட்டு கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

          இந்நிலையில், தண்டனை கைதிகளுக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த கைதி ஒருவரும், மதுரை கைதிகள் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டு சொகுசு வசதியுடன் கூடிய படுக்கை அறைகள், அதில் மெத்தை, தலையணைகளுடன் கூடிய கட்டில்கள் என உல்லாச விடுதியாகவே சிறையை மாற்றி உள்ளனர். கைதிகளுக்கான ஆடையை அணியாமல் இவர்கள் சுற்றுலா செல்வதுபோல பல வண்ண நாகரிக உடைகளை அணிந்தும், காலில் விலை உயர்ந்த காலனிகள் அணிந்தும் சிறைக்குள் வலம் வருகின்றனர். கருப்புநிற கண்ணாடி அணிந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தும், செல்பி எடுத்தும் உற்சாகமாக இருப்பது இந்த புகைப்படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

            ‘ஹாட்பாக்ஸ்’களில் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட வடை, தோசை என விதவிதமான சூடான உணவுகள் அறையில் வைக்கப்பட்டுள்ளன. சிறை அதிகாரிகள் துணையோடு பிரபல உணவகங்களில் இருந்து சுவையான உணவுகள் வாங்கி உண்பது தெரிகிறது. தற்போது 250 கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் அறைகளில் டி.வி. உள்ளிட்ட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புழல் சிறையில் 24 உயர்மட்ட அறைகளில் காவல்துறை டிஐஜி முருகேசன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கைதிகளின் அறையில் இருந்த 18 டிவிகள், எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Related Posts