பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

 

 

பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கர்நாடக தேர்தல் பிரச்சாரம் நடைப்பெற்ற காலத்தில் மட்டும், மந்திரம் போல் உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை, தேர்தல் முடிந்த உடன் உயர்ந்து விட்ட விநோதத்தை மத்திய பா.ஜ.க. அரசு தான் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிக பெரிய தாக்குதல். விலைவாசி உயர்வு அனைத்திற்கும் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் விளக்கம் என்பது கண்டனத்திற்குரியது.

எண்ணை நிறுவனங்களே ஒவ்வொரு நாளும் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற ஆபத்தான முடிவை மத்திய அரசு எடுத்த காரணத்தினால், பெரும் பின்னடைவை இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், கர்நாடக தேர்தல் பிரச்சாரம் நடைப்பெற்ற காலத்தில் மட்டும், மந்திரம் போல் உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை, தேர்தல் முடிந்த உடன் உயர்ந்து விட்ட விநோதத்தை மத்திய பா.ஜ.க. அரசு தான் விளக்க வேண்டும். தங்களின் ஆதாய அரசியலுக்காக, பெட்ரோல்டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இப்பொது தேர்தல் முடிந்தவுடன் மக்களின் தலையில் தாங்கமுடியாத இப்பெரும் சுமையை ஏற்றக் காரணமாய் இருக்கும் மத்திய அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது கச்சா எண்ணை விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலர் விலையில் உள்ள இந்தச் சூழலில், பெட்ரோல் டீசல் விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால், இன்னும் சில நாட்களில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றிக்கு 100 டாலர் எட்டும் என்று கணிக்கப்படுகிறது. அப்போது பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயரும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிக அளவு பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை சுமத்துகிறது என்பதையும் இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன். இப்பிரச்சினையில் பழனிசாமியின் அரசு வழக்கம் போல கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் உள்ளது, மிகவும் அத்தியாவசியமாகி விட்ட பெட்ரோல் டீசலின் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் முனைப்பு காட்டும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைத்து மக்களை காக்க வேண்டும்.

இவ்வாறு தினகரன் கூறியுள்ளார். 

Related Posts