பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதி

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருவதால் வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

                சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. சில வேளைகளில் அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது. ஆனால் அண்மை காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க அடிப்படையில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் விலையை குறைக்க உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

               பெட்ரோல், டீசல் விலை உயர்வு,  சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வரும் நிலையில்,  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி பிரதமர் நரேந்திர மோடியும், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது கடும அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,சென்னையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 84 ரூபாய் 05 காசுகளுக்கும்,  டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு  77 ரூபாய் 13 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts