பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

 

 

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை எட்டாவது நாளாக இன்று மீண்டும் உயர்ந்திருப்பது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சர்வதேச சந்தையில், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலராக அதிகரித்துள்ளது. கர்நாடகத் தேர்தலுக்குப் பின் ஒருவாரமாக உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 34 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 47 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல்,டீசல் விலை 27 காசுகள் அதிகரித்து 71 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்து விட்டன. வெனிசுலாவில் அரசியல் ஸ்திர தன்மை நிலவுகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

இத்தகைய காரணங்களால் கடந்த வாரம் பெட்ரோலியம் விலை பேரலுக்கு 80 டாலர் உயர்ந்து விட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநிலங்களில் வாட் அல்லது மற்ற வரிகளும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதனால்தான் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எனவே மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை நீக்கி விட்டு ஜி.எஸ்.டி.யினை கொண்டு வர வேண்டும். தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts