பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைக்கப்படுகிறது

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

        அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை கண்டுள்ளதால், பெட்ரோல் டீசல் விலையும் தினம்தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தற்போதைய பொருளாதார நிலையை அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் பேரலுக்கு 86 டாலராக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ஒரு ரூபாய் 50 காசுகள் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது எனவும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், மொத்தம் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறையும் எனவும்,. இதேபோல், மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். பல பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பணவீக்கம் 4 சதவிகிதத்திற்கு கீழ் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அருண்ஜெட்லி கூறினார்.

Related Posts