பெண்களைப் பாதுகாப்பது அனைவரின் தலையாயக் கடமையாகும் என்பதை உணர்ந்து அன்னையர் தினத்தைக் கொண்டாடுவோம்: வைகோ வாழ்த்து 

நவீன தாதியியல் முறையை உருவாக்கி முதலில் செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் துவக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12-ஆம் நாள் 1965 -ஆம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினமாக அறிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல எனவும், தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு மனித அசிங்கங்களைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆற்றும் மகத்தான சேவை செவிலியர் பணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இராணுவம், காவல்துறை போன்று இவர்களும் சீருடைப் பணியாளர்களே என்பதை நினைவுகூர வேண்டியது சமூகக் கடமை என அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியர்க்கு இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் பணியாற்றிய போது 1820  ஆம் ஆண்டுமே மாதம்12-ந் தேதி  பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும் தன் குடும்பப் பெயரான நைட்டிங்கேல்யையும் இணைத்து பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்று பெயரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி செவிலியர் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் எனவும்.

போர்க்களத்தில் காயம்பட்டு, இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்த வீர்ர்களை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கையில் இராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டுச் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறி தேவையான மருந்துகளை வழங்கி அவர்களைத் தேற்றினார் எனவும், , அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அவர்தம் குடும்பத்தினருக்குத் தெரிவித்து அவர்களது கவலைகளைப் போக்கி விரைந்து குணமடைய செய்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  தங்களைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் விளக்குடன் வந்துள்ளதுஎன்று இராணுவ வீரர்கள் அகம் மகிழ்ந்து பாராட்டினர் என்று அவர் கூறியுள்ளார். .

பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பணிகளைப் பாராட்டி செஞ்சிலுவைச் சங்க விருதும், பிரித்தானிய மன்னரின் ‘ஆர்டர் ஆப் மெரிட்’ என்னும் உயரிய விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிளாரன்ஸ்நைட்டிங்கேல் மறைவிற்குப் பின்பு அவரது தன்னலமற்ற பணியை நினைவுகூர ஆண்டுதோறும் மே திங்கள் 12-ஆம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குக்கு செவிலியர்களால் ஒளி ஏற்றப்பட்டு அந்நாளில் அங்கு வரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு அந்த மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும் எனவும், இது ஓர் உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இது ஒரு செவிலியரிடம் இருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதாகும் என்றும். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து மத்திய – மாநில அரசுகள் மே-12 ஆம் நாளில் அவர்களைக் கவுரவிப்பதே நன்றி கடன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

இந்த ஆண்டு மே 12-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில்  உலக செவிலியர் தினத்தோடு அன்னையர் தினத்தையும் சேர்த்துக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியதுஎனவும் அவர் கூறியுள்ளார்.

. ‘தமிழ்த்திருநாடு தன்னை பெற்ற தாய் என்று கும்பிடடி பாப்பா’ என்று கவிஞன்.கூறியதை சுட்டிக் காட்டி   பிறந்தநாட்டைத் ‘தாய்நாடு’ என்றுதானே பெருமையுடன் குறிப்பிடுகிறோம் என்று அவர் வினவியுள்ளார்,  அன்னையைத் தெய்வமாகப் போற்றி பண்பாடு வளர்த்த நாடு தமிழ்நாடு எனவும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவிதைகளைத் தந்த பெண்பாற் புலவர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு எனவும் குறிப்பிட்டுள்ள வைகோ, தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், பொள்ளாச்சி சம்பவங்கள் நெஞ்சைப் பிளப்பதாகவும் தெரிவித்துள்ளார்,  பெண்களைப் பாதுகாப்பது அனைவரின் தலையாயக் கடமை என்பதை உணர்ந்து அன்னையர் தினத்தைக் கொண்டாடுவோம் எனவும்,

தியாகத்தின் மொத்த உருவமாகத் திகழும் அன்னையருக்கும், புனிதமான செவிலியர் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் செவிலியர் சகோதரிகளுக்கும்  நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை மதிமுக சார்பில் உரித்தாக்குவதாகவும் அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Posts