பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய ஆளுநர் பன்வாரிலால்! – குவியும் கண்டனங்கள்

 

 

சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-18 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி (வயது46), தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் அழைப்பு விடுத்த ஆடியோ சமீபத்தில் வெளியானது. இவ்விவகாரத்தில் ஆளுநர் மீதும் சில குற்றச்சாட்டுகள் முன்வேக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:- 

கல்வித்துறையில் எந்த தவறும் நடைபெற வில்லை என நான் சொல்லவில்லை. சில தவறுகள் நடந்துள்ளன. கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி யார் என்று எனக்குத் தெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் கவலைப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டு தவறானது. வெளிப்படையாக விசாரணை நடத்தப்படும். பல்கலைக்கழகத்தில் வேந்தருக்குத் தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. வேந்தர் என்பவர் மாநில அரசையோ அமைச்சர்களையோ கலந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். என் மீது எந்த புகாரும் இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் தருவாயில் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிக் கொடுத்தார்.

இது குறித்து  ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அந்தப் பெண் நிருபர், “ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் நிலையில், நான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதிலாக, எனது அனுமதியின்றியே அவர் கன்னத்தில் தட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை எனது முகத்தைக் கழுவியும் அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டது. ஆளுநர் அவர்களே… தாத்தா என்கிற முறையில் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முறையில் நீங்கள் இதைச் செய்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் செய்தது தவறு!” என்று ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் அநாகரீகமான முறையில் ஆளுநர் நடந்து கொண்டுள்ளார். அதனால், அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.எனவே, அந்த பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிட்டால் விரைவில் ஆயிரக்கணக்கான பெண்களை கூட்டி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும்  என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

 

 

 

Related Posts