பெரியார் சிலையை அவமதித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பெரியார் சிலையை அவமதித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

              பெரியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சி.வி. சண்முகம்,  ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு,நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

                பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயகுமார், பெரியார் சிலையை அவமதிப்பது என்பது ஒட்டு மொத்த தமிழகத்தையே இழிவு படுத்தும் செயல் எனவும், இந்த நாகரீகமற்ற செயலை தமிழக அரசு ஒரு போதும் ஏற்காது என்றும் தெரிவித்தார். சிலையை அவமதித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

                27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்தப் பணி நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஜாதி, மத, மொழியின் பெயரால் பிரச்சினைகள் ஏற்படுத்துபவர்களை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்றும் நீதிமன்றத்தை அவமதித்து பேசிய எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

                இதேபோல் அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன்,  உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், பெருந்தலைவர் மக்கள்கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

                முன்னதாக, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், திடீரென தான் அணிந்திருந்த காலனியை கழற்றி பெரியார் சிலை மீது வீசி எறிந்துவிட்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவரை போலீசார் பிடித்து கைது செய்து அப்புறப்படுத்தினர்.  இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார், பெரியார் சிலையை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Related Posts