பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

            இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி வேறுபாடுகளைக் களையவும், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்கவும், தமிழ்நாடு முழுவதும் சமத்துவபுரங்களை உருவாக்கி பல்வேறு மதத்தினரையும் சாதியினரையும் அங்கு கருணாநிதி அரசு குடியமர்த்தியதாக கூறியுள்ளார்.

             தமிழகம் முழுவதும் உள்ள சமத்துவபுரங்களின் முகப்பில் பெரியாரின் உருவச் சிலைகளை அமைத்து அவற்றை அப்போதைய முதல்வர் கருணாநிதியும்,  துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலினும் திறந்து வைத்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்தியாவிலேயே இத்தகைய சிந்தனையோ செயல் திட்டமோ தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை என்ற சிறப்பினையும் கருணாநிதி அரசு நடைமுறைப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

          இந்த சிறப்புமிகு முன்னோடித் திட்டத்தின் விளைவான பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் பராமரிப்பு இன்றி சிதைந்த நிலையில் உருக்குலைந்து கிடப்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது என அவர் தெரிவித்துள்ளார்.  பெரியார் – அண்ணா பெயரை உச்சரித்துக் கொண்டுள்ள அ.தி.மு.க., அரசு இந்தத் திட்டத்தை,  கருணாநிதி அரசு உருவாக்கியது என்கிற காழ்ப்புணர்ச்சியோடு சமத்துவபுரங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அலட்சியப்படுத்தி வருவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். பல இடங்களில் பெரியார் சிலைகள் சிதைந்து காணப்படுவதுடன், பூங்காக்கள் புதர்மண்டி காடுகளாக உருமாறி விட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

         பேருந்து, சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில் சமத்துவபுரங்கள் இருப்பதாகவும்,  தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியள்ளார். சிலைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்பட வேண்டும் எனவும், பூங்காக்கள் நல்லவண்ணம் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.  பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் பழைய பொலிவுடன் திகழ்வதற்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின்மூலம் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார்.

Related Posts