பெருவெள்ளத்துக்கு பின் கேரளாவில் வறட்சிக்கு வாய்ப்பு

பெருவெள்ளத்துக்கு பின் கேரளாவில் வறட்சிக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறித்து ஆய்வு செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

      வரலாறு காணாத மழை காரணமாக பெரு வெள்ளத்தில் மிதந்த கேரளத்தில், தற்போது ஆறுகள், கிணறுகள் திடீரென வறண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறுகளிலும்,கிணறுகளிலும் நிலத்தடி நீரும் குறைந்து வருவதுடன், விவசாயிகளின் தோழன் என்று அழைக்கப்படும் மண்புழுக்களும் பெருமளவில் அழிந்து வருகின்றன.பல்லுயிர் பெருக்கத்துக்கு பெயர்போன வயநாடு மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து பிரச்னைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை அளிக்குமாறு மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்..மழை பெய்தபோது பெரியார், பாரதபுழா, பம்பை, கபானி ஆகிய நதிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் ஓடியது. தற்போது அந்த நதிகளில் நீரின் அளவு வழக்கத்துக்கு மாறாக குறைந்து வருகிறது.   இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தபோது அதிக அளவு நிலச்சரிவு நேரிட்டது. வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களில் நிலப் பகுதியே மாறிவிட்டது. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலத்தில் விரிசல் காணப்படுகிறது.பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். கிணறுகள் வறண்டுள்ளதுடன், அவை மண்ணுக்குள் புதையும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், வறட்சி பிரச்னை குறித்து ஆய்வு செய்ய மத்திய நீர் வள மேலாண்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்லுயிர் பெருக்கத்தை சீரமைக்க கேரள வனத் துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலின் ஆய்வுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts