பேனரால் உயிரிழப்பு : முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

சென்னை பள்ளிக்கரணையில், இளம் பெண் சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்றே வரிசையாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்த சுபஸ்ரீ, நேற்று மாலை 3 மணி அளவில் வேலை முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் குரோம்பேட்டை – துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்தது. இதனால் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது கோவிலம்பாக்கம் சென்ற தண்ணீர் லாரி சுபஸ்ரீ மற்றும் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார். பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும் மற்றும் பரங்கிமலை போக்குவரத்து காவல் பிரிவினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள சண்முகா கிராபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர்ஸ் அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Related Posts