பேராசிரியை நிர்மலாதேவிக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்: சாத்தூர் நீதிமன்றம் அனுமதி

 

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு, சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஏப்ரல்-20 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர், நிர்மலாதேவி. இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி வற்புறுத்திய விவகாரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில், ஆளுநர் அமைத்த குழுவும், இதுகுறித்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இன்று அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி சென்ற அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு, நிர்மலா தேவியால் தவறான பாதைக்கு அழைக்கப்பட்ட 4 மாணவிகளிடம் விசாரணை நடத்தியது. மேலும், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள்  உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அதிகாரி சந்தானம், இன்னும் 2 நாட்களில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கூறினார்.

இதனிடையே, பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு, சாத்தூர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. காவலில் எடுக்கப்பட்ட நிர்மலா தேவியிடம், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

Related Posts