பேருந்து மோதியதில் வடபழனி பேருந்து நிலைய பணிமனையின் சுவர் இடிந்து விழுந்ததில்  2 பேர் உயிரிழப்பு.

பேருந்து மோதியதில், சென்னை வடபழனி பேருந்து நிலைய பணிமனையின் சுவர் இடிந்து விழுந்ததில்  2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை வடபழனி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நள்ளிரவில் ஊழியர்கள் பணிகளை முடித்துவிட்டு ஓய்வாக அமர்ந்திருந்தனர். அப்போது பணிமனைக்குள் வந்த அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் உள்ள சுவற்றின் மீது மோதியது. இதில் அந்த சுவர் இடிந்து சரிந்ததில் பணிமனை ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சேகர், பாரதி என்ற 2 ஊழியர்கள் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்துக்கு கூடுதலாக நிதி, ஊழியர்களுக்கு பணிமனையில் ஓய்வறை கட்டித்தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட மாநகரப் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் இளங்கோவன் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனிடையே, காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை  மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் விபத்து நடைபெற்ற பணிமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்துக் கேட்டறிந்தார்.

பேருந்தை இயக்கிய ஓட்டுநர் அனுபவம் வாய்ந்தவர் தான் என்றும் பேருந்திலும் பிரேக் உள்ளிட்ட பிரச்சினைகள்  எதுவும் இல்லை என்றும்  ராதாகிருஷ்ணன் கூறினார். விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இறந்த ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்படும் நிதி மட்டுமன்றி முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதல் நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Posts