பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகளில் மட்டுமே வெளியிடக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

 

 

10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிகளில் மட்டுமே வெளியிட கோரிய வழக்கில்பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், அரசால் நடத்தபடும் 10ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளிதழ் மற்றும் தொலைகாட்சி மூலம் வெளியிடப்பட்டுவருகின்றன என்று கூறியுள்ளார். இதனால் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்றும் இதைத் தடுக்கப் புதிய நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

தேர்வு முடிவுகளை அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த மனுதாரர், அதன் பிறகு தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்துத் தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று யோசனை தெரிவித்திருந்தார். இதனால் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என்றும் அந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவர வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து பள்ளிக் கல்வித் துறையிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ள மனுதாரர் செந்தில் குமார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இதனை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,மனுதாரரின் கோரிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Related Posts