பொருளாதார சரிவு மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவு

நாட்டின் பொருளாதார சரிவு மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவு என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

இந்தியாவின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு நேற்று  வெளியானது. அதில், நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளள்ளது. கடந்த 7 வருடங்களில் முதல்முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதார சரிவுக்கு மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட காரணங்களாலேயே இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை முற்றிலும் மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவு ஆகும் என தெரிவித்துள்ளது.

இதனிடையே,  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்திருக்கும் நிலையில், மத்திய அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்திருப்பது, இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். வேலையிழப்பு, தொழில்துறை பிரச்சினைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Related Posts