பொறியியல் கலந்தாய்வு அட்டவணை குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும்:  அன்பழகன் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பொறியியல் கலந்தாய்வு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக கடந்த 22 ஆண்டுகளாக பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைகழகம் நடத்தி வருகிறது. இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி தலைவர் பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அண்மையில் விலகினார். மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி தலைவராக உயர்கல்வித்துறை செயலாளராகவும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையரை இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என சூரப்பா கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை தமிழக அரசு கருத்தில் கொள்ளாததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து  கலந்தாய்வை யார் நடத்த வேண்டும் என்ற முடிவு எட்டப்படாததால், கலந்தாய்வு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது பொறியியல் படிப்பு மீதான மாணவர்களின் ஆர்வம் தற்போது குறைந்து வரும் நிலையில், கலந்தாய்வு முடிவுகளும் எட்டப்படாததால் மாணவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடுவது தொடர்பாக இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். முன்னதாக பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடுவது தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகனுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர்  இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வி செயலர் மங்கத் ராம் ஷர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Posts