பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை டிடியாக செலுத்தலாம்: அண்ணா பல்கலைக்கழகம்

 

 

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை வங்கி வரைவோலையாகவும் செலுத்தலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வுமூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில், மொத்தம் உள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் காலி இடங்களில், 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. இந்த வருடம்  முதல், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கு, ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதன் கட்டணத்தையும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு, நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன்மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணத்தை  பே-ஆர்டர் மற்றும் டி.டி மூலமாகச் செலுத்தலாம் எனக் கூறினார். மேலும், கிராமப்புற மாணவர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்வதற்கு 42 இடங்களில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு 30 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மீண்டும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, டி.டி, பே-ஆர்டர் மூலம் பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளதால், அதை அனுமதிக்க முடியாது என்றும் அதற்குப் பதில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் மாணவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படக் கூடாது. எளிதாக எப்படி கட்டணம் செலுத்த முடியும் என்பதை இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டிடியாக செலுத்தலாம் என்று உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டிடியில் கட்டப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வரும் 18 ஆம் தேதிக்குள் வரைவோலையை ஏற்றுக்கொள்ளும் வகையில் மென்பொருள் மாற்றியமைக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

 

Related Posts