பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது

 பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் பழகி காதலிப்பதாக கூறி அவர்களைபாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவில்  பதிவு செய்து மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த்தை தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் இதுவரை சிபிஐ இந்த வழக்கை ஏற்கவில்லை. எனவே இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றிய பிறகும் எதற்காக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், வழக்குஎப்போது சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதால் இந்த வழக்கை பெண் உயர் அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு, இதுகுறித்து ஏப்ரல் 25க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் மணிவண்ணனை விசாரித்த போது பாலியல் கொடூர குற்றத்திலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவண்ணனை 3 நாள் போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணையில் தெரியவந்த விபரங்களை அறிக்கையாக தயாரித்து, சீலிட்ட உறையிலிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை உயர்நிதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

Related Posts