கர்நாடக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப ஆணை

 

 

கர்நாடக மாநில சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுனர் உத்தரவிட்டார். ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். அதன்படி தற்காலிக சபாநாயகர் போபையா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது.பாஜக எம்எல்ஏக்கள் ஏற்கனவே வந்திருந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள சொசுகு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே, தற்காலிக சபாநாயகர் போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று காலை 10.30 மணிக்கு விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரரின் வாதங்களை கேட்டபிறகு , தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை ரத்துசெய்ய மறுத்துவிட்டது.

காங்., சார்பில் வாதாடிய சிங்வி, போப்பையாவுக்கு அனுபவம் கிடையாது. அவர் ஜூனியர். அவர் சபாநாயகராக இருந்தால் ஓட்டெடுப்பு சரியாக நடக்காது. இதற்கு முன் சபாநாயகராக இருந்து அவர் எடுத்த முடிவுகள் சர்ச்சையாகி உள்ளன என வாதிட்டார். இதனைக் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அப்படியானால் நம்பிக்கை ஓட்டெடுப்பை ஒத்திவைக்கலாமா என கேள்வி எழுப்பினர்.  

தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், போப்பையாவை தற்காலிக சபாநாயகராகர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிடுமாறு கேட்ட காங்கிரசின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும், போப்பையாவை நீக்க உத்தரவிட முடியாது. போப்பையா தான் சபாநாயகராக இருந்து ஓட்டெடுப்பை நடத்துவார். குறிப்பிட்ட நபரை சபாநாயகராக நியமிக்க பரிந்துரைக்க கோர்ட்டிற்கு அதிகாரம் கிடையாது என தெரிவித்தனர். 

அதேசமயம், சட்டசபையில் இன்று மாலை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் வீடியோ எடுப்பதுடன், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என நீதிபதிகள்  உத்தரவிட்டனர். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமைடைந்துள்ளன.

 

Related Posts