போராட்டம் நடத்த அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                சென்னை, மெரினாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலகின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு அளித்தது. அதன்பின் மெரினாவில்  தொடர்ச்சியாக போராட்டம் நடத்தும் முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்ததுடன் மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதித்தது.

                இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி,  மெரினா கடற்கரையில் காவிரி பிரச்சனைக்காக ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்ட்டார்.

                இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, தொடர்ந்து வழக்கை விசாரித்தனர். இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து  இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

Related Posts