ப.சிதம்பரத்திடம் அதிகாலையில் இருந்தே சிபிஐ அதிகாரிகள் விசாரணை

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அதிகாலையில் இருந்தே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. வயது மூப்பு, மருத்துவ தேவை காரணமாக ப.சிதம்பரத்திற்கு இரவு ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னர் ப.சிதம்பரத்தை அதிகாலையில் எழுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ‌வழக்கு தொடர்பாக அவரிடம் இருந்து அடிப்படை தகவல்களை பெற சிபிஐ அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ரோஸ் அவென்யூ‌ பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது 10 முதல் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை முறையாக ஆஜராகி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் கேட்கப்படும். ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ‌தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

Related Posts