ப. சிதம்பரம் கைது : அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் கொடுத்துள்ள வாரண்ட் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி,ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மதியம் வரை சி.பி.ஐ. அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்துவரப்போவதில்லை என்றும், ப.சிதம்பரத்திற்கான மருத்துவமனை பரிசோதனை கூட சி.பி.ஐ. அலுவலகத்திலேயே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிபிஐ அலுவலகத்திலே மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், தான் தலைமறைவாக எங்கும் செல்லவில்லை என்றும், வழக்கு தொடர்பாக கடந்த இரு நாட்களாக வழக்கறிஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தாகவும் கூறினார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தம் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கைகளில் தமது பெயர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தை மிகவும் மதிப்பதாக கூறிய அவர், சட்டத்தின் மூலம் உரிய பாதுகாப்பை பெற முயற்சிப்பதாக கூறினார்.  விசாரணை அமைப்புகள் சட்டத்தை சமநிலை இல்லாமல் பயன்படுத்தினாலும், அதனை மதிக்க தயார் என்று அவர் கூறினார்.

Related Posts