ப. சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ப. சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமூர்த்தி பவன் அமைந்துள்ள பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

சென்னை அடையாறில் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ப.சிதம்பரம் கைது நடவடிக்கையை கண்டித்து அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தியாகராஜன், சிதம்பரத்தை கைது செய்ததை கே.எஸ்.அழகிரி நியாயப்படுத்துகிறாரா? என வினவினார்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மவுன்ட் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸார் பங்கேற்றனர். சுவர் ஏறி குதித்து கைது செய்யும் அளவிற்கு ப. சிதம்பரம் செய்த குற்றம் என்ன என்று மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் மன்சூர் சுபான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சியில் அருணாச்சலம் மன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் மோடியின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சில தலைவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. கே.வீ. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர், அல்போன்ஸ், ஜே.எம். ஆரூண், விஜயதரணி, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts