ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரத்திற்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ்

மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரத்திற்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் மீது கோபிகிருஷ்ணா என்பவர் இந்த ஆண்டு ஜனவரி 16 ம் தேதி, உச்சநீதிமன்றத்திற்கு புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், “ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம் சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு முன் ஜாமின் பெறுவதற்காக ஜனவரி 11 ம் தேதி, மூத்த வழக்கறிஞர் என சொல்லிக் கொண்டு அவரே வாதிடுவதாகவும், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் எனக் கூறி அவரே வாதாடுவது வீதிமீறலானது என்றும் பதவியை தவறாக பயன்படுத்தியது தெளிவாக தெரிகிறது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரை விசாரித்த 4 பேர் கொண்ட பார் கவுன்சில் குழு, ” புகார் வந்ததன் அடிப்படையிலும், நீதியை கவனத்தில் கொண்டும் மூத்த வழக்கறிஞர்களான சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவர்களுடன் புகார்தாரரான கோபிகிருஷ்ணாவும் செப்டம்பர் 28 ம் தேதி காலை 11.30 க்கு பார் கவுன்சில் முன் ஆஜராக வேண்டும் எனவும் அவர்களோ அல்லது அவர்களின் ஆலோசனை குழு மூலமோ ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது. இந்த நோட்டீஸ் மற்றும் உச்சநீதிமன்ற துணை பதிவாளருக்கு அனுப்பப்பட்ட புகாரின் நகலும் சிதம்பரம் மற்றும் அவரது மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts