ப.சிதம்பரம் முன்ஜாமீன் வழக்கு : நீதிபதி பானுமதி அமர்வில் இன்று விசாரணை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.  நேற்று அதிகாலை முதல் அவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை  ஆஜர்படுத்தினர். அவர் குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். கபில்சிபல், அபிஷேக் சிங்வி, விவேக் தன்கா ஆகியோர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதாடினர். சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா  ஆஜராகி வாதாடினார். சிபிஐ தரப்பில் 5 நாள் காவல் கோரி  சி.பி.ஐ மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக துஷார் மேத்தா கூறினார்.  ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், கேள்விகளை தவிர்த்து வருவதால், குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களோடு சேர்த்து அவரை விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார். காவலில் இருக்கும் போது தான் சில கேள்விகளுக்கு பதிலை பெற முடியும் என்றும் அவர் வாதிட்டார். ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் உள்ளார், ஆடிட்டர் பாஸ்கர ராமன் முன் ஜாமீன் பெற்றுள்ளார், பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி ஆகியோருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது என்றார். முதலீடுகளை அனுமதித்த உத்தரவை வழங்கிய 6செயலாளர்கள் கைது செய்யப்படவில்லை, விசாரணை ஏற்கனவே முடிவடைந்து விட்டதால் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 5 நாட்கள், அதாவது 26-ந் தேதி வரை சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி வழங்கினார். இந்த 5 நாளில் ப. சிதம்பரம் தினமும் அரை மணி நேரம் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி வழங்கிய நீதிபதி, திங்கள் கிழமை அவரை ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

இதனிடையே, முன்ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

Related Posts