மகனின் நீட் தேர்வுக்காக சென்றபோது எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி

 

 

மகனின் நீட் தேர்வுக்காக சென்ற போது எர்ணாகுளத்தில் மாரடைப்பால் இறந்த கிருஷ்ணசாமியின் உடல், சொந்த ஊரான விளக்குடி கிராமத்துக்கு வந்து சேர்ந்தது. அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.   

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, மகனின் நீட் தேர்வுக்காக எர்ணாகுளம் சென்று விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை மகனை நீட் தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு அறைக்கு திரும்பிய கிருஷ்ணசாமி மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணசாமியின் உடல், இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான விளக்குடி கிராமத்துக்கு வந்தடைந்தது. அங்கு அவரது  உடலை பார்த்து கிருஷ்ணசாமியின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கிருஷ்ணசாமியின் உடலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கிருஷ்ணசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால்தான், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார். நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றும் கனிமொழி தெரிவித்தார். இதேபோல், கிருஷ்ணசாமியின் உடலுக்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Posts