மகாராஷ்டிராவில் அணை உடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

மகாராஷ்டிராவின் சிப்லுன் தாலுகாவில் உள்ள திவாரே அணை 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அணையின் கட்டுமானப்பணிகளை சிப்லுன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்சதானந்த் சவானுக்கு சொந்தமான ‘கெம்டெக்’ என்ற நிறுவனம் மேற்கொண்டது. கடந்த நவம்பர் மாதமே இந்த அணையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டிருந்தனர். இதையடுத்து,  சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் அணையை பார்வையிட்டு சில மராமத்து பணிகளை மேற்கொண்டனர். ஆனால், அணையை பலப்படுத்தவோ அல்லது அணையில் விரிசல் ஏற்பட்ட பகுதியை நிரந்தரமாக சீரமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை முதல், விடாது பெய்த கனமழை காரணமாக திவாரே அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், திடீரென அணையில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த பகுதி உடைந்து அணை நீர் வெள்ளமாக  வெளியேறியது. இதில் அணையை ஒட்டியுள்ள திவாரே உள்ளிட்ட 7 கிராமங்களை  வெள்ள நீர் சூழ்ந்தது.  வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பலர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.இந்நிலையில் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். மாயமான இன்னும் 4 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் வேகமுடன் நடந்து வருகின்றன.

Related Posts