மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா : ஜூன்-25

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, மும்பையில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், தாராவி, சியான் போன்ற இடங்களில் நள்ளிரவு நேரத்தில் கனமழை பெய்தது. மும்பையின் கிழக்கே உள்ள செம்பூர் மற்றும் போஸ்டல் காலனி ஆகிய பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் புகுந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும், கார்களும் மழைநீரில் தத்தளிக்கின்றன. மும்பையின் கிழக்கு விரைவுச் சாலையிலும், வாகனங்கள் குறைந்த வேகத்திலேயே பயணித்தன.

குஜராத் மாநிலத்தில் வால்சாத் மாவட்டத்தின் அம்பேர்கான் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் குடியிருப்புகள், வணிக வளாகங்களில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில், இன்றும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts