மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : சபாநாயகர் ஓம் பிர்லா

கடந்த மே மாதம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதையடுத்து 17-வது மக்களவை கடந்த ஜூன் 17ஆம் தேதி கூடியது. ஜூன் 20ஆம் தேதி மாநிலங்களவை கூடியது.  ஜூலை 26-ஆம் தேதி உடன் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடையும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டி இருப்பதாக கூறி நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு நீட்டித்தது.  இதையடுத்து, முத்தலாக் மசோதா, அணைகள் பாதுகாப்பு மசோதா, மருத்துவ ஆணைய மசோதா, ஜம்மு காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள்  உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், மக்களவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். ஆகஸ்ட் 7 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts