மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரசு மருந்தகங்கள் செயல்படும்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரசு மருந்தகங்கள் செயல்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், நுண்வழி அறுவை சிகிச்சை பிரிவு சார்பாக நடைபெற்ற மருத்துவ கல்வி சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஓராண்டில் மட்டும் 346 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தமிழக அரசு காலதாமதம் செய்யவில்லை எனவும், நிலம், மின்சாரம் தொடர்பான தடையில்லா சான்றிதழை தமிழக அரசின் சார்பில் எய்ம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக கூறினார். திருவள்ளுர், தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும், இதனை ஆய்வு செய்ய பூச்சியியல் வல்லுநர்கள் கொண்ட குழு வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருந்து விற்பனையாளர்கள் வரும் 28ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாகவும், ஆன்லைன் விற்பனைக்கு அரசின் எதிர்ப்பு இருந்தாலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரசு மருத்தகங்கள் செயல்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Related Posts