மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : மு.க.ஸ்டாலின்

      “எம்.ஜி.ஆர்-க்கு புகழ் சேர்ப்பதற்கு பதிலாக மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமது பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிப்பதாக கூறியுள்ளார். இந்த விழாவில் தாம் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ள மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரத்தில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், அவருடையை அருமை பெருமைகளைப் பரப்புவதை விட எதிர்க்கட்சியான தி.மு.கவையும், குறிப்பாக எம்.ஜி.ஆர்-உடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டிய கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும், கடுமையாக விமர்சிப்பது ஒன்றையே முதல்வரில் தொடங்கி துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் இலக்காகக் கொண்டிருந்ததை, தமிழக மக்கள் நன்கறிவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

      எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவின் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு, அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் தனக்கு உடன்பாடில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

      அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கருணாநிதி – எம்.ஜி.ஆர். நட்பு எனவும், அதனை அரசியலாக்காமல் நாளையாவது எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டைக் கொண்டாட அரசினரை வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Posts