மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆணை

 

மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணல் கடத்தலில் கைதான பாபு என்பவரை விடுவிக்க வேண்டும் என வேடியம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ராமதிலகம் தலைமையிலான அமர்வு, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதிகாரிகள் உடந்தையாக இல்லாமல் மணல் கடத்தல் என்பது சாத்தியமில்லை என்று தெரிவித்த நீதிபதிகள்,  அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மணல் கடத்தலில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுவரை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், கடந்த 8 ஆண்டுகளில், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.      

Related Posts