மதவாத சக்திகளால் உருவாக்கப்படும் ஆபத்துக்களை எதிர்கொண்டு முறியடிக்க தியாகத் திருநாளில் உறுதி கொள்வோம் – வைகோ

     மதவாத சக்திகளால் உருவாக்கப்படும் ஆபத்துக்களை எதிர்கொண்டு முறியடிக்க தியாகத் திருநாளில் உறுதி கொள்வோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

                பக்ரீத் திருநாளையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை, நபி இப்ராகீம் பலியிட முன்வந்த தியாகம் உலகெங்கும் நினைவுகூரப்படுவதாக கூறியுள்ளார்.  நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன் மக்கள் சங்கமித்து, வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுவதாக அவர் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற தன்மையின் பாதுகாப்பில்தான் அனைத்து சமய மக்களின் நல்லிணக்கமும், அமைதி வாழ்வும் நிலைநிறுத்தப்படும் என்று வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ள வைகோ, அண்மைக் காலமாக மதவாத சக்திகளால் உருவாக்கப்படும் ஆபத்துக்களை எதிர்கொண்டு முறியடிக்க இத்திருநாளில் உறுதி ஏற்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

                தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் என அவர் தெரிவித்துள்ளார். இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் இதயபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Related Posts