மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு மேல்முறையீடு

 

தமிழகத்தில் உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

டெல்லி, மே-01 

சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்னர் அந்த கடைகளை வேறு இடங்களில் மாநில அரசு திறந்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக இருப்பதாகவும், இதனால், 800-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் தமிழக அரசு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Posts