மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை

தமிழக மக்களுக்கு விரோதமான எந்த திட்டங்களையும் அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 20 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முதல்வர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை தொகை உள்பட 14,622 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டுமென பிரதமரிடம் கோரியதாக தெரிவித்தார். மேலும், மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டுமாறும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும், மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார். டிடிவி தினகரன்-ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே தெளிவாக பதிலளித்துவிட்டார் என முதல்வர் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.

Related Posts