மதுரை எய்ம்ஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மதுரை எய்ம்ஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை எனவும், கட்டுமானம் தொடர்பாக எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கவில்லை எனவும் மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை உறுப்பினர் ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகமதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும், மத்திய சுகாதார அமைச்சக அறிவுறுத்தலின்படி, கட்டிட வரைபடம் மற்றும் நிதி ஆதாரங்களை பெறுவது உள்ளிட்ட முதல்கட்ட பணிகளை ஹெச்.எல்.எல் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். இவ்விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசின் தொடர்பில் உள்ளதாகவும்,. எனவே இத்திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை வரும்.9-ந் தேதி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts