மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முறைகேடாக பட்டங்கள் வழங்கியவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், முறைகேடாக பட்டங்கள் வழங்கியவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியகுழுவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமாராஜர் பல்கலைக் கழகத்தில் தொலை நிலைக் கல்வியில் பட்டம் பெற்ற விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.வாணி என்பவர், தனது ஆசிரியப்பணி விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மானியக்குழு விதிகளுக்கு எதிராக மாணவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு பட்டங்கள் வழங்குவதாக குற்றம்சாட்டினார்.

முறைப்படி கல்வி கற்றவர்களை மட்டுமே அரசு வேலை வாய்ப்புகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும் வணிக நோக்கத்தில் பட்டங்கள் வழங்கும் பல்கலைக்கழகங்களை கண்டறிந்து அவற்றின் அங்கீகாரத்தை ரத்து வேண்டும் எனவும் மானியக்குழுவுக்கு உத்தரவிட்டார்.

மேலும், 3 ஆண்டு இளங்கலை படிப்பில் முதல் 2 ஆண்டில் ஒரு படிப்பையும், மூன்றாம் ஆண்டில் ஒரு படிப்பையும் ஒருவரால் எப்படி படிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த கல்விமுறை பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரிக்காத கல்வி முறை என்றும் சுட்டிக்காட்டினார்.

இவற்றைத் தடுக்க அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டிய மானியக்குழு தனது கடமையில் இருந்து தவறி விட்டதாக சாடிய நீதிபதி,காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தி, முறைகேடாக பட்டம் வழங்கியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி தொலை நிலைக்கல்வியில் பயின்றவர்களுக்கு வகுப்பறை அனுபவம் இருக்காது என்றும் அவர்களால் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Posts