மதுரை சித்திரை திருவிழாவில் உச்சகட்ட நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்  கோலாகலமாக நடைபெற்றது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டம் சூட்டப்பட்டதை தொடர்ந்து  மீனாட்சி, 8 திசைகளிலும் சென்று தேவர்களை வென்று இறைவன் சுந்தரேசுவரரிடம் அடையும் திக்கு விஜயம் நேற்று நிகழ்ந்தேறியது.  சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் மற்றொரு நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மேற்கு-வடக்கு ஆடி வீதியில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி திருக்கல்யாண மண்டபம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருக்கல்யாணத்தையொட்டி அதிகாலை 4 மணியளவில் சுவாமி- அம்மன் சித்திரை வீதிகளில் வெள்ளி சிம்மாசன வாகனத்தில் வலம் வந்தனர். முன்னதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வரிசையாக வந்தனர். மீனாட்சி அம்மன் பட்டுச்சேலை அணிந்து வைர கிரீடம், வைர மூக்குத்தி, பவளக்கல் பதித்த மாலைகளும்,  சுந்தரேசுவரர் வெண்பட்டும், ஊதா நிற கல் பதித்த வைர கிரீடமும் அணிந்திருந்தனர். இதனை தொடர்ந்து  காலை 9.52 மணிக்கு மிதுன லக்கனத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. மல்லிகை மலர்களால் சுற்றப்பட்ட தங்கத்தில் வைரம் பதித்த மங்கல நாண் பக்தர்களிடம் காட்டப்பட்டதுடன், சுவாமி- அம்மன், பிரியாவிடை முன்பும் 3 முறை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க மீனாட்சி அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வந்திருந்த திரளான பெண் பக்தர்கள் தங்களது மாங்கல்ய கயிறை புதிதாக மாற்றி அதில் குங்குமம் இட்டு ஒற்றிக் கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்ததும் சுவாமி-அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மேடையில் இருந்து புறப்பாடாகி பழைய திருக்கல்யாண மகாலுக்கு சென்றனர். இரவு நடைபெறும் அனந்தராயர் பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் வலம் வருகின்றனர்.

Related Posts