மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டுப்பணம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் 3 பெட்டிகளில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணத்தை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 2 பேரைக் கைது செய்தனர்.

மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் கட்டுக் கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பார்சல் செய்து தயாராக வைக்கப்பட்டிருந்த அனைத்து பெட்டிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

கருவிகளில் எதுவும் அகப்படாத நிலையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், இருந்த 3 அட்டைப் பெட்டிகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் உதயம் பருப்பு பாக்கெட்டுகள், நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இரண்டு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு அடியில் 30லட்சம் ரூபாய் அளவுக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும், மற்றொரு பெட்டியில் 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பண நோட்டுகளும் இருந்தன.

வெளிநாட்டு பண நோட்டுகளுடன் கூடிய அட்டைப் பெட்டியைக் கொண்டு வந்த மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ரபீக் ராஜா, ரூபாய் நோட்டுகளுடன் பெட்டியைக் கொண்டு வந்த சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்த பிரேம் நசீர் ஆகியோரை அதிகாரிகள் அதிகாரிகள் கைது செய்தனர்.

சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவின் தமிழ்நாடு தலைவர் ரஞ்சன் குமார் ரவுத்ரே உத்தரவின் பேரில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை விமான நிலையத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 6 கோடி ரூபாய் அளவுக்கு பணம் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts