மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் அமைந்துள்ள சிறிவெங்கடேஸ்வர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாரகரத்னா மைதானத்தில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி  இதே  தாரகரத்னா மைதானத்தில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு பேசிய  நரேந்திர மோடி, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது; ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வது; ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; விவசாயிகளின் வேளாண் விளைபொருள்களுக்கு உச்ச விலை வரம்பு நிர்ணயிப்பது என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார் என்றும். ஆனால் அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.  புல்வாமா தாக்குதலில்  40 வீர்ர்கள் உயிரிழந்தபோது, தன்னை தேசியவாதி என்று சொல்லிக் கொள்ளும் மோடி, தேசியப் பூங்கா ஒன்றில் அமர்ந்து தன்னை குறித்து எடுத்த குறும்படப் பிடிப்பில் கலந்து கொண்டு, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார் என்றும் அந்நேரத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவோ, பயங்கரவாதிகளின் செயலுக்கு பதிலடி கொடுக்கவோ அவர் முயற்சிக்கவில்லை என்றும் சாடினார்.   இதன் மூலம் மக்களின் நலன் மட்டுமல்லாமல் நாட்டின் நலனும் மோடி அரசால் கேள்விக்குறியாகி உள்ளது என்று ராகுல் தெரிவித்தார்.  காங்கிரஸ் கட்சி ஆந்திரத்தில் ஆட்சி அமைக்கவில்லை என்றாலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றால் இந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை முதல் பணியாக மேற்கொள்ளும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்தார்.முன்னதாக, திருப்பதியிலிருந்து, திருமலைக்கு ராகுல்காந்தி நடைபாதை வழியாக சென்று  ஏழுமலையானை வழிபட்டு திரும்பினார்

Related Posts