மத்தியில் புதிய அரசு அமையும் வரை, ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய பாஜக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்:  ஸ்டாலின் 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனம், அமெரிக்க நிறுவனம், ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆகியவற்றிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா பகுதியில் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு இந்த நிறுவனங்களுடன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் செய்ததாக அவர் கூறியுள்ளார். வேதாந்தா நிறுவனத்திற்கு 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 67 கிணறுகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நேரத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் விதிமுறை மீறல் என அவர் , சுட்டிக்காட்டியுள்ளார்.ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி கொடுத்து விட்டு, மக்களிடம் கருத்து கேளுங்கள் என்று ஒப்புக்காக ஒரு வெற்று நிபந்தனையை, மத்திய அரசு விதித்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியில் புதிய அரசு அமையும் வரை, ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு, அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். காவிலி டெல்டா மண்டலம் பாலைவனம் ஆவதைத் தடுக்க, இது தொடர்பாக, தமிழ்நாடு அரசே, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக கடிதம் எழுதி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில், மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். .

Related Posts